வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத் தேரின் தெய்வீக வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயம் ஐந்து அர்ப்பணிப்புமிக்க அறங்காவலர்களின் தலைமையில் புதிய எழுச்சியையும் வளர்ச்சியையும் கண்டது. கல்வி, நெசவுத் தொழில் மற்றும் வணிகத் துறைகளின் மூலம் சமூக முன்னேற்றத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்த இப்பெருமக்கள், ஆலயத்திற்கென ஒரு மாபெரும் சித்திரத் தேரை அமைக்க வேண்டும் என்ற புனித நோக்கத்தைக் கொண்டனர். இந்த உயரிய முயற்சிக்கு அறங்காவலர்களும் பக்தர்களும் முழுமனதுடன் ஆதரவளித்தனர்.
1957-1958 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அறங்காவலராகப் பணியாற்றிய திரு து. சீனிவாசகம் அவர்கள், தேர்க் கட்டுமானப் பொறுப்பை திரு சி.பொ. செல்லையா அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தியாவிலிருந்து திறமையான கலைஞர்களை அழைத்து வரச் சென்றபோது, பணமும் உடமைகளும் இழக்க நேர்ந்தபோதிலும், மனம் தளராது தனது பொறுப்பை நிறைவேற்ற உறுதியுடன் செயல்பட்டார். சிறந்த சிற்பிகளையும் கைவினைக் கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தார்.
சிற்பிகள் குறிப்பிட்ட தரமான மரங்களைத் தேவைப்படுவதாகக் கூறியபோது, திரு சி.பொ. செல்லையா அவர்கள் பலமுறை வன்னிக் காடுகளுக்குச் சென்று பொருத்தமான மரங்களை அடையாளம் கண்டார். அவற்றை வெட்டுவதற்கான அரசாங்க அனுமதிகளைப் பெற்று, ஆலயத் திடலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார். பின்னர், அந்த மரக்கட்டைகள் திறமைமிக்க கலைஞர்களின் கைவண்ணத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகளை உயிர்ப்பிக்கும் அபூர்வச் சிற்பங்களாக உருவெடுத்தன. இரவு பகலாக அயராது உழைத்த சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான சித்திரத்தேரின் வெள்ளோட்டம் 1959 ம் ஆண்டு நடைபெற்றது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் மகோற்சவ காலத்தில் எம்பெருமாள் இச் சித்திரத் தேர் ஏறி அருளாட்சி புரிந்து வருகின்றார்.
தேரின் தெய்வீக அலங்காரம்
தேரின் மேல்தளத்தில் ஸ்ரீமத் பாகவதம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய புனித இதிகாசங்களின் முக்கிய நிகழ்வுகள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் அற்புதமான சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு தேரின் மகத்துவத்தை உயர்த்துகின்றன.
அதே தளத்தில் பாலகிருஷ்ணரின் தெய்வீக லீலைகளான மணல் உண்டது, வெண்ணெய் திருடி உண்டது, உரலுடன் கட்டுண்டது, காலிங்க நர்த்தனம், கம்சன் வதம், சகடாசுரன் வதம் ஆகிய நிகழ்வுகளுடன் பகவத் கீதையின் உன்னதப் போதனையான கீதோபதேசமும் அழகுற செதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மேடை: இராமாயணக் காட்சிகள்
இரண்டாவது மேடையில் ஸ்ரீ இராமபிரானின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் பல முக்கிய நிகழ்வுகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில்:
- ஸ்ரீ இராமபிரானின் பட்டாபிஷேகம்
- அகலிகை சாப விமோசனம்
- சீதா கல்யாணம்
- அனுமன் – சுக்ரீவன் சந்திப்பு
- வாலி வதம்
- இலங்கைக்கு பாலம் அமைத்தல்
- இராவண வதம்
உள்ளிட்ட பல இராமாயணக் காட்சிகள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.
கீழ்த்தள அலங்காரங்கள்
தேரின் கீழ்த்தளத்தில் ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள், ஆதிசேஷத்தில் பள்ளிகொண்ட பெருமாள், தில்லை கோவிந்தராஜர், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீநிவாசர், கஜேந்திர மோட்சம் மற்றும் இரணியன் வதம் போன்ற தெய்வீக வடிவங்களும் புராண நிகழ்வுகளும் சிற்பங்களாக அலங்கரிக்கின்றன.
மூன்றாவது மேடை
மூன்றாவது மேடையில் பன்னிரு ஆழ்வார்களின் திருவுருவங்கள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. தேரின் உச்சிப் பகுதியில் கந்தர்வர்கள் தெய்வீக அலங்காரமாக விளங்க, முன்னே வெள்ளைக் குதிரைகளுடன் பார்த்தசாரதி ஸ்ரீகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
பக்தியும் ஒற்றுமையும் பேசும் சஞ்சாரிக்கும் ஆலயம்
இந்தத் தேர் வெறும் மரச்சிற்பங்களின் தொகுப்பல்ல. பகவானின் அவதாரங்கள், இதிகாசங்கள், ஆழ்வார்களின் பக்தி மரபு மற்றும் தெய்வீக லீலைகள் அனைத்தையும் ஒரே வடிவில் ஒருங்கிணைத்த சஞ்சரிக்கும் ஆலயமாக இது திகழ்கிறது. பக்தி, கலை மற்றும் சமுதாய ஒற்றுமையின் அழியாத சின்னமாக இத்தேர் விளங்குகிறது.
ஊதியம் எதையும் எதிர்பாராமல், அர்ப்பணிப்பு, தியாகம், அன்பு மற்றும் பக்தியுடன் உழைத்த அறங்காவலர்களும், அவர்களுடன் தோளோடு தோள் நின்ற பக்தர்களும், நமக்கு ஒரு தேரை மட்டும் விட்டுச் செல்லவில்லை. அர்ப்பணிப்பு, ஒற்றுமை, சேவையுணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற உயரிய வாழ்வியல் விழுமியங்களையும் தலைமுறைகளுக்குப் பாடமாக விட்டுச் சென்றுள்ளனர்.
திரு சி.பொ. செல்லையா அவர்களின் மூத்த பேரனும், மருத்துவருமான டாக்டர் மனோகரன் வாசுதேவன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.
நன்றி: திரு கருணாகரன் வாசுதேவன்.






































