கொடியேற்ற மகோற்சவம் 06-10-2021
எம்பெருமான் திருத்தல மகோற்சவம் இன்றுமுதல் ஆரம்பம். இன்று காலை கொடியேற்ற உற்சவம் காலை ஏழே முக்கால் மணிக்கு ஆரம்பமானது. புவிப்பேரிடர் பெருந்தொற்று காரணமாக அடியார்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. உபயகாரர் முன்னிலையில் குருக்கள் கொடியேற்றி எம்பெருமான் திருவிழாக்களை ஆரம்பித்து வைத்தார்.
இன்று மாலை நான்கரை மணியளவில் வசந்த மண்டபபூசை, சுவாமி உள்வீதியில் மட்டும் எழுந்தருளுவார்.
அடியார்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எம்பெருமான் சீதேவி பூமாதேவி சமேதராய் எங்களனைவருக்கும் இன்னருள் புரிவாராக!
நன்றி படங்கள் ; எமது ஆலய நிர்வாகம் புலனம் குழு
எட்டாம் நாள் பகல் சுவாமி அம்பாள்மாருடன் சின்னக் கருட வாகனத்தில் உள்வீதி வலம் வருகின்றார். இரவு சுவாமி குதிரை மீது காட்சி தருகின்றார். கையில் சவுக்கு கொடுத்து மறுகையில் கடிவாளத்துடன் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இக்காட்சி பகவானைக் குபேரனாகவும் கல்கி அவதாரம் பெற்றவனாகவும் சித்தரிக்கின்றது
நன்றி : பெருமாள் மகாசபை இலங்கை புலனம் குழு
ஒன்பதாம் நாள் பகல் சுவாமி தேவிமாருடன் மிக அலங்காரமாக சிம்மாசனத்தில் காட்சி தருகின்றார். ஜடாமுடி தரித்து சுவாமி தேவியருடன் அழகிய ரதத்தில் உலா வருவார். இரதோற்சவத்தன்று சுவாமி தேரினின்று இறங்கி தேவஸ்தானத்திற்குள் வரும் போது பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப் படுகிறார்.
நன்றி : பெருமாள் மகாசபை இலங்கை புலனம் குழு
பத்தாம் நாள் காலையில் தீர்த்தோற்சவ அங்கம் ஆகிய பொற்சுண்ணம் இடித்தல் வைபவம் பொற்சுண்ணப் பாக்கள் இசைக்கப் பட்டு நடைபெறும். இதன் பின் பேரி தாடன உற்சவம் நடைபெற்று சுவாமி கருட வாகனத்தில் அம்பாள்மாருடன் தீர்த்தோற்சவத்திற்குச் செல்வார். தீர்த்த வைபவம் நிறைவு பெற்றதும் சுவாமி உள்வீதியில் யாக மண்டபத்தில் நின்று பூரணாகுதியை ஏற்றுக்கொண்டு கோபுர வாயில் சென்று பாத தீர்த்தம் பெற்று அமர்கிறார். கொடிக்கம்பத்தின் முன்னால் ஆதிஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு ஆசனம் கொடுக்கப் படுகின்றது. இவருக்கு திருவோணத் தீபப் பூஜை நடாத்தப் பட்டு திருவோணத் தீபம் ஏற்றப்படுகிறது. இதன் பின் மூல மூர்த்திக்கு யாக கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின் கோபுர வாயிலில் இருந்து சுவாமி வசந்த மண்டபத்தை அடைந்ததும் யாகப் பொட்டும் முளைப்பாலிகையையும் தீர்த்தமும் அடியவர்கட்கு வழங்கப்படும். இத்துடன் தீர்த்தோற்சவ விழா நிறைவு பெற்று இரவு கொடியிறக்க விழா நடை பெற்று சுவாமி அம்பாள்மாருடன் சந்திரப் பிறைச் சேவையில் வெளிவீதி உலா வருகின்றார்.
நன்றி : பெருமாள் மகாசபை இலங்கை புலனம் குழு