மகா கும்பாபிசேகம் 2024 கருட தரிசனம்
மகா கும்பாபிசேகம் 2024  கருட தரிசனம் 

மகோற்சவங்கள்

 

வண்ணை ஸ்ரீவேங்கடேசனது மகோற்சவ வைபவங்கள்.

இந்து ஆகமங்களில் கூறப்பட்டுள்ள மும் மூர்த்திகளில் காத்தல் தொழிலுக்கு அதிபதியாக விளங்குபவர் திருமால் ஆவார். இவரை வைணவ மதத்தைச் சேர்ந்தோர் பல பெயர்களைக் கொண்டு அழைக்கின்றார்கள். திருமாலைத் தமது குல தெய்வமாக வணங்குபவர்களை வைணவர் என்று அழைப்பர். தென் இந்தியாவில் வைணவஸ்தலங்கள் 108 உள்ளன. தமிழ் நாட்டில் வடகலை தென்கலை வைணவர்கள் உள்ளனர். வடகலையைச் சார்ந்த வைணவர்கள் திருவேங்கடம் என அழைக்கப்படும் திருப்பதி தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேங்கடேசப்பெருமானின் முகூர்த்தத்தையே தமது குல தெய்வமாக வணங்குகின்றனர். இவர்களின் முதன்மைத்தலம் திருப்பதி ஆகும். பண்டைக்காலத்தில் இவ் வைணவர்கள் தமது நெற்றியில் இடும் நாமத்தைப் புருவம் வரை இடுவர். இவர்களை வடகலை வைணவர் என்றும், தமது நெற்றியில் இடும் நாமத்தை புருவத்தின் கீழ்ப்பாதம் இடுபவரை தென்கலை வைணவர் என்றும் அழைப்பர். இவர்களது முதன்மைத்தலம் ஸ்ரீரங்கமாகும். இவர்கள் தமது குல தெய்வமாக வரதராஜப்பெருமாளை வணங்குவர். இவ் இரு பாலாரும் ஸ்ரீரங்கநாதரை வணங்குவர். ஸ்ரீரெங்கத்தைப் பெரிய கோயில் என்று அழைப்பர். மேற்படி தேவஸ்தானத்தைப் பரிபாலிக்கும் பத்மசாலிச்செட்டிகளில் இவ் இரு பாலாரும் உள்ளனர். அத்துடன் இப்பத்மசாலி சாகியத்தினருள் சிறபான்மையினராக வீர சைவர்களும் உள்ளனர். இம் மூன்று வர்க்கத்தினரும் தமது குலதெய்வமாக ஸ்ரீவேங்கடேசவரதராஜப் பெருமாளையே வணங்கி வருகின்றனர்.

இத்தேவஸ்தானத்தைச் சார்ந்த வைஷ்ணவர்கள் கி.பி 1800 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு சென்று வைஷ்ணவப் பட்டாச்சாரியார்களை அணுகி வைஷ்ணவத் தீட்சை பெற்றுக்கொண்டனர். அதற்குப் பின் இவ்வழக்கம் அருகி விட்டது. வைஷ்ணவ தீட்சை பெற்ற வைஷ்ணவர்கள் பன்னிரு இடங்களில் நாமத்தைத் தரிக்க வேண்டும். அக்காலத்தில் வைதீக அந்தணர்கள் கடல் கடந்து செல்லும் பிரயாணங்களை ஏற்பதில்லை. வைணவத் தலங்களில் இருபெருங் கூறான கிரியை முறைகள் நடைபெறுகின்றன. அவை வைகானச ஆகம, பாஞ்சராத்திர ஆகம சம்ரதாயங்களுக்கேற்ப பூஜாவிதானங்களை அமைத்துள்ளனர். இத்தேவஸ்தானத்தில் வைகானச ஆகமத்திற்கு அமைவான பூஜாகாரியங்களே அன்று தொட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன. இத்தேவஸ்தானத்தில் மகோற்சவ காரியங்கள் அனைத்தும் வைகானச வைணவ ஆகமத்திற்கேற்ப கிரியா அம்சங்கள் யாவும் நிகழ்த்தப் பெறுகின்றன. இத்தேவஸ்தானம் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கோட்பாட்டையும் அனுசரிக்கும் ஒரு திவ்வியமான தேவஸ்தானமாக குடாநாட்டு மக்கள் கருதுகின்றனர்.

இத்தேவஸ்தானத்தில் கி.பி 1878 ம் ஆண்டு தொடக்கம் மகோற்சவங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அன்று தொடக்கம் இன்று வரை கஸ்தம் பாதச் சாத்துப்படி நடைபெற்று வருகின்றது.  கஸ்தம் பாதச் சாத்துப்படியின் அவசியம் பற்றி எமது தேவஸ்தானத்தின் பத்ததியில் கூறப்பட்டுள்ளது. வைஷ்ணவ ஆகம சாஸ்த்திரங்களுக்கு ஏற்றவகையில் கஸ்தம் பாதச் சாத்துப்படி உருப்படிகள் இத்தேவஸ்தானத்தில் அமைந்துள்ளன. ஆதியில் வைஷ்ணவ அந்தணர்கள் சாத்துப்படியைச் செய்து வந்தனர். இப்பொழுது அவர்களிடம் பயிற்றி பெற்ற சைவ அந்தணர்கள் செய்து வருகின்றனர்.  இத் தேவஸ்தானத்தின் மகோற்சவங்களிவ் வீதிவலம் வரும் வாகனங்களாவன கருடன், ஆதிஷேசன் ஆகிய ஐந்து தலை நாகம், அன்னம், அனுமன், யானை, குதிரை, பூந்தண்டிகை, சப்பறம் ஆகும்.

மகோற்சவ விழாக்கள் புரட்டாதி மாத்தில் பூர்வ பட்சத்து அத்தம் அல்லது சித்திரை நட்சத்திரத்தில் ஆரம்பமாகின்றது. முதல் நாள் விழா கொடியேற்ற விழாவாகும். கொடியேற்ற விழாவன்று சுவாமி தேவிமாருடன் சூரிய விருத்தச் சேவையில் எழுந்தருளுகின்றார். வைஷ்ணவ ஐதீகப்படி சேவை என்பது திருவிழாவையும் வாகனத்தையும் குறிக்கும் சொல்லாகும். கொடியேற்றத்தன்று இரவு சுவாமி மாத்திரம் அன்ன வாகனத்தில் வெளிவீதி உலா வருவார். பிரம்ம தேவனது படைத்தற் தொழிலை ஞாபகப் படுத்தும் விதமாக அன்ன வாகனம் அமைகிறது.

இரண்டாம் நாள் இரவு சுவாமி ஐந்து தலை நாகம் மீது சயனம் செய்யும் வகையில் அழகிய கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக் காட்சி பகவான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை உணர்த்துகின்றது.

மூன்றாம் நாள் இரவு சுவாமி கருடன் மீது வீதிவலம் வருகின்றார். இக் காட்சி பகவானது காத்தற் தொழிலை ஞாபகப்படுத்துகின்றது.

நான்காம் நாள் இரவு சுவாமி அனுமன் மீது எழுந்தருளிக் காட்சி தருகின்றார். சுவாமியின் கையில் வில்லு அம்புடன் சாத்துப்படி நடைபெறுகின்றது. இக்காட்சி ஸ்ரீராமனது அவதாரத்தை உணர்த்துகின்றது.

ஐந்தாம் நாள் இரவு சுவாமி பூந்தண்டிகையில் வீதி வலம் வருகின்றார். சுவாமியை மிக அலங்காரமாக செல்வந்தக் கோலத்தில் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இது பகவானை செல்வந்தனாக சித்தரிக்கின்றது.

ஆறாவது நாள் இரவு சுவாமி யானை மீது வீதி வலம் வருகின்றார். சுவாமி கையில் துரட்டி கொடுத்து கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக்காட்சி பகவான் முதலை வாயிலிருந்து யானையைக் காத்த செயலை உணர்த்துகின்றது.

ஏழாம் நாள் இரவு சுவாமி சப்பறத்தில் வெண்ணெய்த் தாளியுடன் எழுந்தருளுவார். இது ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் உண்ட காட்சியை கஸ்தம் பாதச் சாத்துப்படி மூலம் மக்களுக்கு உணர்த்தும் காட்சியாகும்.

எட்டாம் நாள் பகல் சுவாமி அம்பாள்மாருடன் சின்னக் கருட வாகனத்தில் உள்வீதி வலம் வருகின்றார். இரவு சுவாமி குதிரை மீது காட்சி தருகின்றார். கையில் சவுக்கு கொடுத்து மறுகையில் கடிவாளத்துடன் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இக்காட்சி பகவானைக் குபேரனாகவும் கல்கி அவதாரம் பெற்றவனாகவும் சித்தரிக்கின்றது.

ஒன்பதாம் நாள் பகல் சுவாமி தேவிமாருடன் மிக அலங்காரமாக சிம்மாசனத்தில் காட்சி தருகின்றார். ஜடாமுடி தரித்து சுவாமி தேவியருடன் அழகிய ரதத்தில் உலா வருவார். இரதோற்சவத்தன்று சுவாமி தேரினின்று இறங்கி தேவஸ்தானத்திற்குள் வரும் போது பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப் படுகிறார். பாத தீர்த்த வைபவம் நடைபெற்றதும் கோவில் ஓதுவார், ஊழியர்களாகிய மங்கள வாத்தியக்காரர், சங்க நாதம் ஒலிப்பவர், பூமாலை புனைபவர், திருத்தொங்கல் புனைபவர், தேருக்கு முண்டியிட்ட ஆசாரியார், சலவைத் தொழிலாளர், களஞ்சிய வேலை செய்வோர் ஆகியோருக்கு வேட்டி சால்வை வழங்கப்படுகின்றது. சுவாமி வசந்த மண்டபம் அடைந்ததும் சுவாமிக்கு சர்க்கரை, புளி, தயிர் சாதவகைகளுடன் பழவகைகளும் காளாஞ்சிகளும் பானகம் ஆகிய சர்க்கரையுடன் தேன் கலந்த நீர், மோர் ஆகியவை நிவேதனம் செய்யப்படுகின்றன. இதன் பின் மகா ஆசீர்வாத வைபவம் நடைபெறுகின்றது. இரவு தேரடி வைபவ விழா நடைபெறுகிறது.

பத்தாம் நாள் காலையில் தீர்த்தோற்சவ அங்கம் ஆகிய பொற்சுண்ணம் இடித்தல் வைபவம் பொற்சுண்ணப் பாக்கள் இசைக்கப் பட்டு நடைபெறும். இதன் பின் பேரி தாடன உற்சவம் நடைபெற்று சுவாமி கருட வாகனத்தில் அம்பாள்மாருடன் தீர்த்தோற்சவத்திற்குச் செல்வார். தீர்த்த வைபவம் நிறைவு பெற்றதும் சுவாமி உள்வீதியில் யாக மண்டபத்தில் நின்று பூரணாகுதியை ஏற்றுக்கொண்டு கோபுர வாயில் சென்று பாத தீர்த்தம் பெற்று அமர்கிறார். கொடிக்கம்பத்தின் முன்னால் ஆதிஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு ஆசனம் கொடுக்கப் படுகின்றது. இவருக்கு திருவோணத் தீபப் பூஜை நடாத்தப் பட்டு திருவோணத் தீபம் ஏற்றப்படுகிறது. இதன் பின் மூல மூர்த்திக்கு யாக கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின் கோபுர வாயிலில் இருந்து சுவாமி வசந்த மண்டபத்தை அடைந்ததும் யாகப் பொட்டும் முளைப்பாலிகையையும் தீர்த்தமும் அடியவர்கட்கு வழங்கப்படும். இத்துடன் தீர்த்தோற்சவ விழா நிறைவு பெற்று இரவு கொடியிறக்க விழா நடை பெற்று சுவாமி அம்பாள்மாருடன் சந்திரப் பிறைச் சேவையில் வெளிவீதி உலா வருகின்றார்.

பதினொராம் நாள் மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். சுவாமி மிக அலங்காரமாக மணவாளக் கோலத்தில் அழகாக சாத்துப்படி செய்யப்பட்ட அம்பாள்மாருக்கு திருமாங்கல்ய தாரணம் செய்து மணவாளக் கோலத்தில் பூந்தண்டிகையில் வெளிவீதிஉலா வருவார். தேவியருடன் மணவாளக் கோலத்தில் சுலாமி பூந்தண்டிகையில் வரும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுகின்றனர்.

பன்னிரண்டாம் நாள் மாலையில் சுவாமி வசந்த மண்டபத்தில் பூஜையாகிய பின் திரு ஊஞ்சல் பாக்கள் ஓதுவார் இசைக்க திருவூஞ்சலில் ஆடுவார். பின்பு சுவாமி பூந்தொட்டியில் மிக அலங்காரமாக வீதிவலம் வருவார்.

பதின்மூன்றாம் நாள் சுவாமியை யோகநாராயணர் சேவையில் கஸ்தம் பாதசாத்துப்படி செய்து இவருடன் கூட ஆதிஸ்ரீவேங்கடேஷ்ரவரையும் அலங்கரித்து இலந்தை விருட்சச் சேவையில் வெளிவீதி உலா வருவார்.

பதின்நான்காம் நாள் காலை மூல மூர்த்திகளுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று வாகன பூஜையும் நடைபெறும். அன்று மாலை ஆஞ்சனேய மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று அடியவர்கள் ஆஞ்சனேயருக்கு பொங்கல் வைப்பார்கள். உற்சவ மூர்த்தியாகிய ஆஞ்சனேயரை அலங்காரம் செய்து வெளிவீதியிலுள்ள ஆஞ்சனேயர் கோயிலில் எழுந்தருளப்பண்ணி அடியவர்களின் பொங்கற் பிரசாதங்கள் ஆஞ்சனேயர் முன் படைக்கப் பட்டு வடைமாலைகள் சாத்தப்பட்டு சோடசோப உபசாரப் பூஜை நடைபெறும். இதன் பின்பு ஸ்ரீஆஞ்சனேயர் வீதி வலம் வருவார். இத்துடன் மகோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

வைஷ்ணவ பூஜை விதானத்திற்கேற்ப உபயகாரர் மற்றும் அர்ச்சனை செய்யும் அடியவர்க்கு மூலமூர்த்தியின் சந்நிதியில் சடகோபம் என்ற நாமமுடைய சாமியின் திருப்பாதம் பொருத்தப்பெற்ற முடி சாத்தப்படுகிறது.

ஆக்கம் திரு திரு.மு.சிவலோகநாதன்