இராஜ கோபுரம்

வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் இராஜ கோபுரம்

யாழ் நகர் வண்ணை ஸ்ரீவேங்கடேச வரதராஜப் பெருமாளின் திருக்கோவில் திருக்கோபுரம் ஏழுநிலைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இக்கோபுரத்தின் ஏழு அடுக்குகளிலும் ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் தசாதவதாரங்களும், ஸ்ரீகண்ணனின் லீலா விநோதங்களும் ஸ்ரீஇராமபிரானின் இராமாயண வரலாறும், விஷ்ணு பக்தர்களாகிய ஆழ்வார்களின் திருவுருவங்களும் காணப்படுகின்றன. ஸ்ரீமந்நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஸ்ரீஇராம அவதாரமும் ஸ்ரீகிருஷ்ண அவதாரமும் வைணவர்களால் பெரிதும் போற்றப்படும் அவதாரங்களாகும். இராமாயண காவியம் ஸ்ரீஇராம அவதாரத்தையும், ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தையும், லீலைகளையும் எடுத்தியம்புவனவாகக் காணப்படுகின்றன. இவ்விரு கதைகளிலும் இடம்பெறும் உபகதைகள் உருவச்சிலைகளாக வடிவமைக்கப்பெற்று இக்கோபுரத்திலே இடம்பெற்றுள்ளது. பிள்ளைப்பருவத்தே இராமன், கைகேயியின் தோழியாகிய கூனியின் முதுகிலே காணப்பட்ட கூனுக்கு விளையாட்டாக அடித்த காட்சி, விசுவாமித்திரரின் கட்டளைப்படி தசரதன், தன்மக்களாகிய இராம இலக்குமணரைத் தண்டகாருண்யத்திற்கு அனுப்பி அங்கு முனிவரின் வேள்வியைக்காத்து, தாடகையை வதம் செய்த காட்சி, விஸ்வாமி த்திர முனிவருடன் மிதிலை நோக்கிச் செல்லும் வழியில் கல்லுருக்கொண்ட அகலிகை ஸ்ரீஇராமனது பாதம் பட்டு, சாபவிமோசனம் அடைந்த காட்சி, மிதிலையில் ஐனகமகா ராஐனின் வில்லினை ஒடித்து, உப்பரிகையில் நின்ற சீதையை அண்ணலும் நோக்க அவளும் நோக்கிய காட்சி, கைகேயியின் கட்டளைப்படி பதினான்கு ஆண்டுகள் வன வாசம் செய்யச் சென்ற இராமபிரான், வழியில் சித்திரகூடத்தில் வேடுவனாகிய குகனின் நட்பைப் பெற்று அவனைத் தனது சகோதரனாக ஏற்ற காட்சி, வனவாசத்தின் போது இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த காட்சி, இராவணனால் சீதையைக் கவர்ந்து செல்ல மாயமானாக வந்த மாரீசன் அம்புபட்டு வதையுண்ட காட்சி, இராவணன்சடாயுபட்சியை வதைத்த காட்சி, சீதையைத் தேடிச் சென்ற இராம இலக்குமணர் அனுமனைச் சந்தித்து, சுக்கிரிவனது அரசை வாலியிடமிருந்து பெறும் பொருட்டுஇருவரும் சண்டையிட்டபோது ஸ்ரீஇராமன் ஏவிய கணை ஏழு மராமரங்களைத் துளைத்து வாலியின் நெஞ்சைத் துளைத்த காட்சி, அசோகவனத்தில் சிறையிருந்த செல்வியாகிய சீதையிடம் அனுமன் கணையாழி பெற்று வந்த காட்சி, இராம இராவண யுத்தம், ஸ்ரீ இராம பட்டாபிஷேகம் போன்ற இராமாயண நிகழ்ச்சிகள் யாவும் தத்ருபமாக சித்தரிக்கப்பெற்று இராமாயண காவியத்தையே சிலைகளாக வடித்த நிலையில் ஏழுநிலைக்கோபுரத்தின் தென்பாகம் முழுவதும், காவியச் சிறப்பமையக் காணப் படுகின்றது.

இவ்வாறே ஸ்ரீகிருஷ்ணபகவானது குழந்தைப்பருவத்தையும், லீலைகளையும் கதைகளாகச் சித்தரிக்கின்ற உருவச்சிலைகளையும் இக் கோபுரத்திலே காணலாம். குழந்தைக் கண்ணன் ஆலிலையில் நின்று காற்பெருவிரைலச் சுவைக்கும் காட்சி குழந்தைக் கண்ணன் பசுக்கன்றுகளை அவிழ்த்து விட்டு ஆயர்பாடிப் பெண்களுக்கு இன்னல்களைக் கொடுக்கும் காட்சி, வெண்ணெய் திருடி உண்ணும் காட்சி, தன்னை கொல்ல முயன்ற பூதகியின் முலையுண்டு அவளை வதம் செய்த காட்சி, குறும்பு செய்த கண்ணனை யசோதை உரலுடன் கட்டி வைக்க அவ்வுரலையே உருட்டிச் சென்று விருட்சமாகி நின்ற காட்சி, நள கோபர் இருவருக்கும் சாபவிமோசனம் அளித்தகாட்சி பசுக்கன்றுகளைக் காக்கும் கோபாலனாக நின்ற காட்சி, கோபியர் நீராடும்போது அவர்களின் ஆடைகளைக் கவர்ந்து சென்று விருட்சத்தில் மறைத்து வைக்கும் காட்சி, கண்ணன் தனது தாய் மாமனான கம்சனைக் வதம் செய்யும் காட்சி குருஷேத்திரத்தில் கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் நடைபெற்ற யுத்தத்தில் அர்ச்சுனனுக்கு தேர்ச்சாரதியாகி கீதையை உபதேசித்த காட்சி, ஆகியன ஏழுநிலைக் கோபுரத்தின் வடபாகத்தே தத்ருபமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இக்கோபுரத்தின் ஏழாவது நிலத்தின் தென்புறத்தே ஸ்ரீமகாலஷ்மியின் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீவெங்கடேசப் பெருமாளும் ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் ஸ்ரீரங்கநாதர் திருவுருவமும் பார்ப்போரை பரவசப்படுத்தும் தன்மையில் காணப்படுகின்றன. முதலாம் நிலம் தொடங்கி ஏழு மாடம் வரை எழில் மிகு ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் தசாவதாரங்களான மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமண பலராம, இராம, பரசுராம, கிருஷ்ண, கல்கி ஆகியன காணப்படுகின்றன. இவற்றோடு கருடப்பட்சியில் ஸ்ரீமகாவிஷ்ணு தனது தேவியருடன் வீற்றிருக்கும் காட்சி, ஆதிமூலமே என்று அபயக்குரல் எழுப்பிய கஜேந்திரனை முதலை வாயிலில் இருந்து மீட்டகாட்சி கண்ணன் ராதையுடன் குலவும் காட்சி என்பனவும் அழகுக்கு அழகு செய்யும் காட்சி களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பன்னிரு ஆழ்வார்களையும் முறையே ஆறு கோபுர நிலங்கள் தோறும் இருவராக நின்று ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் அருளை வியந்து போற்றி நிற்கும் பரவச நிலையில் படைத்துள்ளனர். கோபுரத்திலுள்ள சிற்பங்களை வைத்து அக்கோவில் எத்தெய்வத்துக்குரிய கோவில் என்பதை அனுமானிக்க முடியும்.

சொல்லோவியமாக வடிக்கப்பட்ட காவியச் சிறப்புக்களையெல்லாம் மனக்கண்ணால் கண்டு பேசும் சிலைகளாக ஓவியங்களாக வடித்த பெருமை தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்பலானி என்னும் இடத்தைச் சேர்ந்த திரு.வி.நாகலிங்கம் ஸ்தபதி அவர்களுக்கே உரியது. இறைவனின் திருவிளையாடல்களை மனக்கண்முன் கொண்டுவந்து அவனது பாதாரவிந்தங்களைச் சேவிக்க இவ்வாறான கலைப்பண்பு மக்களுக்கு வழிகாட்டுகின்றது. இவ்வாறான கோபுரம் பல பண்புகளை எடுத்தியம்புகின்றது. கோபுரத்திலே சித்தரிக்கப்படுவன யாவும் படைப்பின் வெளிப்பாடுகளே. அன்றியும் கோபுரங்கள் வாழ்க்கையின் கோட்பாட்டையும் குறிக்கோளையும் தெளிவாக விளக்குகின்றன.

கோபுரம் ஒன்றுக்கு மேற்பட்ட பல அடுக்குகளைக் கொண்டது. அது மூன்று ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று என்னும் ஒற்றைப்படையில் காணப்படும். இவற்றுக்கு ஆகமங்களில் விளக்கங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு வாயில் அமைந்திருக்கும். மூன்றடுக்காயின் அவை சாக்கிரம் சொப்பனம் சுமுத்தி எனும் மூன்ற அவஸ்தைகளைக் குறிக்கும். ஐந்தடுக்காயின் மெய் வாய் கண்மூக்கு செவி என்பனவாகிய துவக்கு சிங்குவை சட்சு ஆக்கிரோணம் சுரோத்தம் ஆகிய பொறிகளைக் குறிக்கும். ஏழுவாயிலாயின் மேலே கூறியவற்றோடு மனம் புத்தி என்பனவும் ஒன்பதாயின் மேலே கூறப்பட்டவற்றோடு சித்தம் அகங்காரம் என்பனவையும் இணையும். இவ்வாறு மனித அமைப்பிலே காணப்படுகின்ற தோற்றப் பாடுகளும் உணர்வுகளும் கோபுரத்தில் தத்துவார்த்தமாக காணப்படும்.

மனிதனிடத்தில் எத்தனை கருவி கரணங்கள் இருந்தாலும் மனதை உள் முகமாக ஒடுக்கிக்கொண்டு இறைவனிடம் சரணடைதல் வேண்டும் என்பதைக் குறிக்கக்கோபுரத்திலுள்ள பெருவாயில் ஒன்றுதான் பயன்படுகின்றது. உள்ளே புகுந்ததும் பலிபீடத்திற்கு இப்பால் வீழ்ந்து வணங்குதலே முறை. இதன் மூலம் பலிபீடத்தில் எண்ண அலைகளை பலியிட்டு இறைநாட்டம் கொண்டவர்களாகி அவன் பாதம் பணிதல்வேண்டும். இவ்வாறான அரும் பெரும் தத்துவங்களைக் கொண்ட ஏழுநிலைக் கோபு ரத்தையும் கதையமைவு கொண்ட தெய்வச்சிலைகளையும் கொண்டதாக விளங்குவது வண்ணை ஸ்ரீவெங்டேசப் பெருமாள் கோவில் கோபுரமெனின் மிகையாகாது.

ஆக்கம்: திருமதி வசந்தா நடராசன் BA
நன்றி திரு S.C பழனிச்சாமி ஆசிரியர் சங்கதி
X