ஆலய அமைப்பும் சிறப்பும்

ஆலய அமைப்பும் சிறப்பும்
ஆக்கம் வீ.என்.சீ. நாராயணசாமி

இந்துக்களின் தெய்வ வழிபாட்டிற்கு ஆலயங்களே உறுதுணையாக அமைந்துள்ளன. ஆலயங்களும் அதன் கோபுரங்களும் ஊருக்கு அணிகலனாகத் திகழ்கின்றன. இந்துமதம் சிற்பக்கலை, இசைக்கலை, சமய இலக்கிய கலைகளுடன் ஒன்றிணைந்த தத்துவங்களையும் சமயக் கிரியைகளiயும் உணர்த்தும் மதமாகத்திகழ்கின்றது. இந்துமத ஆலயங்கள் மக்கள் பண்பாட்டின் உறைவிடமாகும். பசித்தோருக்கு பிரசாதம் என்கின்ற வகையில் உணவளிக்கும் நிலையங்களாகவும், சிற்பம், இசை, சுகாதாரம், சமய தத்துவங்களையும் பக்தி மார்க்கத்தையும் மக்களுக்கு எடுத்தியம்பும் ஸ்தாபனங்களாக அமையப்பெற்றுள்ளன. இந்துக்களின் தெய்வ வழிபாட்டுத் தலங்கள் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை தேவஸ்தானம், கோவில், தலம், ஷேத்திரம், ஆலயம் என்பனவாகும். பண்டைக் காலம் தொடங்கி இன்றுவரை கோவில் வழிபாடு மிகவும் அவசியமெனக் கருதி இந்து மக்கள் இதை விரும்பிப் பின் பற்றுகின்றனர். ஆலய வழிபாட்டை பிம்ப வழிபாடு என வைதிகர்கள் அழைப்பர். பிம்பம் என்பது உருவங்கள் விக்கிரகங்கள் எனப் பொருள்படும்.

ஆலய அமைப்புக்கள்

திருக்கோவில்கள் அமைக்கும் முறைகள் தொன்றுதொட்டுத் தமிழ்நாடு எங்கனும் சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களால் நன்கு பேணப்பட்டு வந்துள்ளன எனத் தமிழ் நாட்டில் உள்ள கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. இந்திய கட்டடக் கலை மூவகையாக நெறிப்படுத்தப்பட்டுள்ளன. அவை நாகரம், வேசரம், திராவிடம் என்பனவாகும். தேவியர் சகிதம் இணைந்த மூலவரும், பரிவார மூர்த்திகளும் அமைந்த திருக்கோவில் சங்கீரண ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாலயங்கள் ஆகம பண்பாட்டிற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் மரம், செங்கற்களைக் கொண்டு கோவில்கள் உருவாகப் பெற்றன என்று சரித்திரம்கூறுகின்றது. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர் மகாபலிபுரத்தில் கன்மலைகளைக் குடைந்து கற்கோவில்கள் அமைத்தனர் என தமிழ் அக வரலாறு புகழ்கின்றது. தமிழ் நாட்டில் உள்ள திருக்கோவில்களில் பூஜை வழிபாடு இயற்றப்பெறும் தெய்வ விக்கிரகங்கள் யாவும் கருங்கற்களினால் வடிக்கப் பெற்று பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளன. இது தமிழ் பண்பாடாகும்.

ஆலய அமைப்பும் சிறப்பும்
மேற்கூறிய திருக்கோவில்கள் அமைப்பில் வைணவம் சார்ந்த வைகாசன ஆகம விதிமுறைகளுக்கு இணங்க யாழ் நகரில் ஏறத்தாழ 14ம் நூற்றாண்டில் அரசோச்சிய தமிழ் மன்னனாகிய குணபூசன ஆரியன் செகராச சேகரனின் காலத்து சிறிய உருவில் வைணவ வழிபாட்டுத் தலமாக உருப் பெற்ற வண்ணை ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயம் ஒல்லாந்தர் காலத்தில் புனர்நிர்மாணம் செய்யப் பெற்றது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி பெற்று சகல பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் அமையப்பெற்ற நிலையில் பிரசித்தமான நவக்கிரக பீடத்தை தன்னகத்தேயுடைய ஒரு திவ்விய ஷேத்திரமாக விளங்கத் தொடங்கியது. அன்று தொடங்கி இன்று வரை இத்தேவஸ்தானத்தை வைணவ சமயத்தைச் சார்ந்த பத்ம சாலிச் செட்டிப்பிள்ளைகள் நிருவாகப் பரிபாலனம் செய்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் உள்ள சைவாகம விதிக்கு உட்பட்ட சைவாலயங்களின் அமைப்பில் இருந்து சிறிது வேறுபட்ட தன்மையை உடையவை விஷ்ணு ஆலயங்கள். விஷ்ணு ஆலயங்களின் அமைப்புத் தன்மையாவன கர்ப கிருஹம் அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம், மகா மண்டபம் இதன் முடிவில் தான் மாற்றம் ஏற்படுகின்றது. இதனையடுத்து சிவாலயங்களில் நந்திபீடம் இடம் பெறுகின்றது. வைணவ ஆலயங்களிலும் இதே போன்று அவ்விடத்தில் கருடன் எழுந்தருளியிருக்கின்றார். ஆனால் இவர் தனது எஜமானாராகிய விஷ்ணு பகவானை தனது விரிந்த சிறகுகளால் மறைத்த வண்ணம் கைகூப்பி வணங்கிய வாறு நிற்கின்றார். இதனால் பக்தர்கள் கர்ப்ப கிருஹத்தில் வீற்றிருக்கும் பகவானை பெருமாளை நிருத்த மண்டபத்தினின்று வணங்க வியலாது. தெற்கில் உள்ள வாயில் வழியாக மகா மண்டபத்தை அடைந்து தான் பகவானை சேவிக்க இயலும் என்பது உணரப் பாலது. இதன் காரணமாக இவ்வாலயத்திலும் இவ் வைணவ ஆகம விதிக்கு அமைய நிருத்த மண்டபத்தில் எழுந்தருளி நிற்கும் கருடனுக்கு ஓர் அளவில் கர்ப்பக் கிருஹத்தை மறைக்குந் தன்மையில் ஒரு கோவில் சிறிய அளவில் உருவாக்கியுள்ளார்கள். இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் ஏறத்தாழ கி.பி 1790ம் ஆண்டுவரை சிறிய உருவிலான சிலாவிக்கிரகமாகிய ஸ்ரீவேங்கடேச மூர்த்தியே மூல மூர்த்தியாக இருந்து வந்தார். பின்பு இச்சாகியத்தினர் பலரின் விருப்பத்திற்கு ஏற்ப இத்தேவஸ்தானத்தை பரிபாலித்தவர்கள் தமிழ்நாடு சென்று ஸ்ரீதேவி பூமிதேவி சமேதரான ஸ்ரீவரதராஜப்பெருமாள் முகூர்த்தத்தை கொணர்ந்து இக்கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஸ்தாபித்துவிட்டு ஸ்ரீவெங்டடேச மூர்த்தியை அகற்றி ஸ்தலவிருட்சமாகிய பலாவின் கீழ் வைத்து விட்டனர். சிறிது காலத்தின் பின்பு இத்தேவஸ்தானத்தின் வருமானமும் சீரும் சிறப்பும் குன்றத் தொடங்கியது. இதன் தன்மையை ஆகம சாஸ்திர வழிமுறையில் ஆராய்ந்து இதற்குரிய பிராயச்சித்தத்தை இயற்றுவதற்காக தமிழ்நாடு சென்று ஒருசில வைணவ சமய ஆச்சாரிய விற்பன்னர்களின் ஆலோசனை பெற்று வந்து 1940ம் ஆண்டளவிற் இத் தேவஸ்தானத்தில் சகல விக்கிரகங்களையும் பாலஸ்தாபனம் செய்து இத் தேவஸ்தானத்தின் ஆதி மூலமூர்த்தியாகிய சிறிய உருவிலான ஸ்ரீவேங்டடேசப்பெருமாளை முன் போல் கர்ப்பக்கிருஹத்தில் ஸ்தாபித்து இவரின் பின்புறத்தில் இவரின் சாயா விக்கிரகமாக ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரான ஸ்ரீவரதராஜமுகூர்த்தத்தையும் கர்ப்பக்கிருஹத்தில் ஸ்தாபித்து 1941ம் ஆண்டில் புனருத்தாரண கும்பாபிஷேகத்தை மூலஸ்தானம் உட்படச் சகல பரிவார மூர்த்திகளுக்கும் நிகழ்த்தினார்கள். 

வாஸ்து சாஸ்திரமும் இந்து சமயமும்

இந்து மத ஆலயங்களின் அமைப்பை வெறும் ஆலய வணக்கத்தல அமைப்பாகக் கருதாது ஒரு மானிடனின் உயிர் பொருந்தப் பெற்ற உடல் உறுப்புகளின் தன்மையை ஒத்ததான வடிவு என வாஸ்து சாத்திரம் புகழ்கின்றது. இதற்கு ஏற்பவே இந்து ஆலயங்கள் அமைக்கப் பெறுகின்றன. அவையாவன சிகை – ஆலயஸ்தூபி, சிரசு – கற்பக்கிருஹம், முகம் – அர்த்தமண்டபம், கழுத்து – ஸ்நபனமண்டபம், இருதயம், வயிறு – மஹாமண்டபம், தொடை – நிருத்த மண்டபம், முழங்கால் – ஆஸ்தான மண்டபம், பாதம் – கோபுரம் என விபரிக்கப்படுகின்றன.

இவ்வாலயத்தில் ஸ்நபன மண்டபத்தில் மணிபூரகம் என்ற பகுதியில் ஸ்ரீரங்கநாதரின் சிலா விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக ஸ்ரீ அரங்க நாதசுவாமி பிரமனை தாமரை மலரில் தாங்கிய வண்ணம் ஆதிசேஷனாகிய ஐந்து தலைகளையுடைய அரவின் மீது சயனித்துள்ளார். இந்நிலையில் இவரது சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை பண்ணப்பட்டுள்ளது. மஹாமண்டபத்தின் தென் பக்கத்தே ஸ்ரீவிக்கினேஸ்வரரின் சிலாவிக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடபாகத்தே ஸ்ரீராமானுஜ ஆச்சாரியரின் தாம்பர விக்கிரகம் இடம் பெறுகின்றது. நிருத்த மண்டபத்தில் கருடனும், இவரின் பக்கத்தே கொடிஸ்தம்பமும் இதன் பக்கத்தே பலிபீடமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு ஸ்தாபிக்கப் பெற்ற கொடிஸ்தம்பத்தின் இடைப் பகுதியாகிய விஷ்ணுபாகத்தில் இக் கொடிஸ்தம்பத்தில் முன்பக்கத்தில் வடகலை நாமமும், தெற்குப் பாகத்தில் சக்கரமும், மேற்குப் பக்கத்தில் ஸ்ரீவேங்கடேச விக்கிரகமும், வடக்குப் பக்கத்தில் சங்கும் பொறிக்கப்பட்டுள்ளன. நிர்த்த மண்டபத்தின் வடபகுதியில் நவக்கிரக மண்டலம் அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய இரண்டு பிரகாரங்கள் இடம்பெறுகின்றன. இவற்றைத் தூலம், சூக்குமம், என்று அழைப்பர். தூலமாகிய உட்பிரகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் ஸ்ரீமகாலஷ்மி சந்நிதியும், இதன்பக்கத்தே ஸ்தல விருட்சமாகிய பலாவும், ஸ்ரீசந்தானகோபாலர் சந்நிதியும், மையப்பகுதியில் ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதியும், ஸ்ரீராம, சீதா, லஷ்மண ஆஞ்சநேயசந்நிதியும் வடமேற்குப் பகுதியில் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியும் இடம்பெற்றுள்ளன. இத்தேவஸ்தானத்தில் வசந்த மண்டபம் சுவாதிஷ்டானப் பகுதியிலும் இதன் மேற்குப் புறத்து ஜாக மண்டபமும் அமைந்துள்ளன.

பெரிய மணிக்கோபுரத்தின் பக்கத்தே ஸ்ரீ ஆஞ்சநேயரது தாம்பர விக்கிரகம் சிறிய கோவிலினுள் இடம்பெற்றுள்ளது. பழந்தமிழ் நாட்டில் ஆலயங்களில் கருவறையின் மேல் உள்ள விமானங்களையே மிக உயரமாக அமைத்து வந்தனர். இந்நியதியில் சோழ அரசனாகிய இராஜராஜன் காலத்தில் மாற்றம் ஏற்பட்டு உயரமான கோபுரங்கள் முக்கிய நுழைவாயிலாகிய கிழக்கு வாயில்களில் அமைக்கப் பெற்றன. இவற்றை இராஜகோபுரங்கள் என அழைக்கின்றனர். இம்மாற்றத்தினால் இதன் பின்பு கருவறை விமானங்கள் உயரத்தில் குறுகிவிட்டன. இத்தேவஸ்தானத்தில் கருவறை விமானம் 1972ம் ஆண்டில் அட்டாச்சரப் பொருளான ஸ்ரீவேங்கடேச வரதராஜப் பெருமாளுக்கு அஷ்டகோணத்தில் அமைக்கப்பெற்று கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்றது. இவ்விமானத்தில் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள், ஸ்ரீலஷ்மிகல்யாணம், ஸ்ரீலஷ்மிதேவி சமேத ஸ்ரீநரசிம்ம முகூர்த்தம், சூரியநாராயணர், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள், ஸ்ரீபூமிதேவி கல்யாணம் ஆகியனவும், சிம்மங்களுடன் கூடிய கருடர்கள் கதை உருவில் உருவாகப் பெற்றுள்ளனர்.

ஆலய அமைப்பில் இராஜகோபுரங்கள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தேவஸ்தானத்தில் 1973ஆம் ஆண்டில் ஏழுதளங்களை உடைய இராஜகோபுரம் ஒன்று உருவாக்பபெற்று 1978ம் ஆண்டில் நிறைவு பெற்று அவ்வாண்டிலேயே இராஜகோபுரக் கும்பாபிஷேகம் நடாத்தப்பெற்றது. இதே போன்று இக்காலத்திலேயே பெரிய கண்டாமனி ஒன்றும் வார்க்கப்பெற்றது. கோபுரத்தில் ஸ்ரீராமாயண, பாரதகாவியங்களின் சில பகுதிகளும், ஸ்ரீமத்பாகவதக் கதைகளின் அம்சமாகிய ஸ்ரீகிருஷ்ணலீலைகளின் சில பகுதிகளும், ஸ்ரீமகாலக்ஷ்மி, ஸ்ரீஆண்டாள்தேவி, ஆதிசேஷனில் பள்ளி கொள்ளும் ஸ்ரீரெங்கநாதசுவாமி, ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கருடனில் எழுந்தருளும் காட்சி, ஸ்ரீவரதராஜப் பெருமாளின் கதை விக்கிரகங்கள் ஆகியன விரவிக்கிடக்கின்றன.

மணிபூரகம் என்று ஆகம சாஸ்திரத்தில் கூறப் பெறும் பகுதியில் ஸ்ரீரங்கநாதரது சிலா விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இச்சந்நிதி தெற்குத் திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது. இவரது சிலாவிக்கிரகம் 1948ம் ஆண்டில் தமிழ் நாட்டில் வடிவமைக்கப்பட்டதாகும். இவரது சந்நிதி ஸ்ரீரெங்கநாத சந்நிதி என வழங்கப்பெறுகின்றது. 1999ம் ஆண்டில் இவரின் சந்நிதி முகப்பில் ஐந்து தளங்களையுடைய பஞ்சேந்திரிய அவஸ்தை என்று கூறப்பெறும் கோபுரம் உருவாக்கப்பெற்று, இக்கோபுர தளங்களில் ஸ்ரீ அரங்கநாதனுடைய திருவடிவம், மற்றும் ஸ்ரீகிருஷ்ணரது லீலைகளும், ஸ்ரீமகாலஷ்மியினதும், ஸ்ரீஆண்டாள் தேவியினதும், சுதை உருவங்கள் வடிக்கப்பெற்று அடியவர்களுக்கு ஆனந்தமயமாள தெய்வீக காட்சிகளை அருள்கின்றன. சுதை வேலைகள் யாவும் பூர்த்தியாகி 2003ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

இவ்வாலயத்தில் மகா மண்டபத்தின் முன் மேற்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரான ஸ்ரீவரதராஜப் பெருமாளின் சுதை வடிவ அமைப்பு, இவர் தேவிமாருடன் கையில் சங்கு சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்திய வண்ணம் நிற்க இவரது முன்னிலையில் கருடனும், அனுமனும் வாய்புதைத்து நிற்கின்றனர். ஸ்ரீரெங்கநாதரது சந்நிதி மேல் தளத்தில் ஸ்ரீ அரங்கர் ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் நிலையில் காட்சி தருகின்றார். இவரது பாதார விந்தங்களைச் சேவித்த வண்ணம் கருடனும் அனுமனும் இருக்கின்றனர். ஸ்ரீமகாலஷ்மியின் சந்நிதி விமானத்தில் அஷ்டலக்ஷ்மிகளின் சுதை உருவங்கள் இடம்பெறுகின்றன. அவை மகாலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, வித்தியாலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானியலக்ஷ்மி, சௌபாக்கியலக்ஷ்மி ஆவர். ஸ்ரீஆண்டாள் விமானத்தில் ஸ்ரீஆண்டாளின் திருவுருவும், ஸ்ரீ பூமிதேவி கல்யாணம் முதலியன சுதை உருவில் உருப்பெற்றுள்ளன.

ஸ்ரீரெங்ககேசரது விமானத்தில் ஸ்ரீஅரங்கநாதரது திருவுருவமும், ஸ்ரீராதையும் கிருஷ்ணனும், ஸ்ரீசங்கரநாராயணமுர்த்தியும், கருடனது திருவுருவங்களும் சுதையில் வடிக்கப்பெற்றுள்ளன. வசந்தமண்டப வாயிலின் மேற்தளத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாளும் மச்ச, கூர்ம அவதாரங்களும் சுதை வடிவில் அமைக்கப் பெற்றுள்ளன. இவ்வாலயத்தில் பண்டுதொட்டு ஆறுகால நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவை உதயக்கால பூஜை, காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாங்காலம், அர்த்தசாமப்பூஜைகள் ஆகும். தினமும் திருப்பதி தேவஸ்தானத்தில் கடைப்பிடிக்கப்படும் ஸ்ரீவேங்கடேசசுப்பிரபாதச் சேவை ஐதிகம் இத்தேவஸ்தானத்திலும் தினமும் காலையில் நிகழ்த்தப்படுகின்றது. இத்வேஸ்தானத்தில் கி.பி 1878ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வருடந்தோறும் பிரமோற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன. இவ் உற்சவம் வருடம் தோறும் புரட்டாதித் திங்களில் வரும் சுக்கிலபக்ஷத்திதியில் அத்த நட்சத்திரத்தில் துவஜா ஆரோகணத்துடன் ஆரம்பமாகி ஒன்பதாவது தினமாகிய உத்தராட நட்சத்திரத்தன்று இரதோற்சவம் நடைபெறுகின்றது. பத்தாவது தினமாகிய திருவோண நட்சத்திரத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகின்றது. இவ்வாலயத்தில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படும் தீர்த்தக் கேணியில் நிகழ்த்த்ப் பெறுகின்றது. பத்தாவது தினம் இரவு துவஜா அவரோகணம் நடை பெறுகின்றது. கொடியேற்ற விழாவன்று இரவு ஜாகபூஜை ஆரம்பித்து 18க் காலங்களுக்கு இவ்வைபவம் நடைபெறுகின்றன. இதனால் வைதீக உத்தமர் இதை நவதின உற்சவம் என அழைக்கின்றனர். இந்த ஜாக வைபவம் தீர்த்தஉற்சவத்துடன் பூர்த்தியாகின்றது. 

மற்றும் உற்சவங்களிலும் இத்தேவஸ்தானத்தில் பிரமோற்சவத்திலும் இடம் பெறும் சிறப்புக்கள், முதற் தினமாகிய கொடியேற்ற விழாவன்று தேவிமாருடன் சுவாமியை சூரிய விருத்தச் சேவையில் எழுந்தருள்செய்து துவஜாரோகன வைபவக்கிரியைகள் யாவும் வைணவ சம்பிரதாயத்திற்கு ஏற்ப வைகானஸ ஆகம விதிப்படி நிகழ்த்தப்பெற்று இறுதியில் கருடபத்ததி ஓதப்பெற்று துவஜா ஆரோகணம் நிகழ்த்தப் பெறுகின்றது. பின்பு வெளிப்பிரகாரத்தில் அஷ்டதிக்குப் பாலகர்களை அஞ்சலி செய்து வரவேற்று பலி வழங்கப்பெற்று உபசரித்து இப்பூஜை இப்பத்து தினங்களும் இரவு பகல் கொடி ஸ்தம்பபூஜையை நிறைவேற்றிய பின் இச்சுற்றுப் பலி பூசை வெளிப்பிரகாரத்தில் நடாத்தப்பெறுகின்றன. துவஜா ஆரோகணத்தன்றும் துவஜா அவரோகணத்தன்றும் இத்திக்குப் பாலகரின் பூஜை விரிவாகச் செய்யப்பட்டு அவ்விரு தினத்தன்றும் ஈசான மூலையில் பூதநாட்டியம் நடாத்தப்பெறுகின்றது. ஈசான மூலையில் மகோற்சவ இரவு வேளை உற்சவங்களில் கட்டியம் சேவிக்கும் ஆச்சாரியரால் தினம் தீபாராதனை செய்யப்பட்டு ஓதுவாரினால் தினமும் பாசுரம் பாடப்படுகின்றன. தினமும் இரவு, பகல் உற்சவங்களில் கட்டியம் சேவிக்கப்படுகின்றன. இக்கட்டியங்களில் பதினொரு அங்கங்கள் அமைந்துள்ளன. அவை அஷ்ட திக்கு பாலகரை வரவேற்று உபசரிக்கும் திவ்விய சமஸ்கிருத சுலோகங்கள் ஆகும். இவற்றுடன் மீதியானவை சுவாமியை வந்தித்து உபசரிக்கும் சுலோகங்களும் அத்துடன் இத்தேவஸ்தானத்தைப் பரிபாலிக்கும் வைணவ சமயத்தைச் சார்ந்த மார்க்கண்டேயகோத்திர வைசியக்குலத் தோன்றல்கள் ஆகிய பத்மசாலிச் செட்டிப்பிள்ளைகளை காத்துரட்சிக்கும் வண்ணம் வேண்டப்படும் சுலோகங்களும் இடம் பெறுகின்றன.

இத்தேவஸ்தானத்தில் மாதம் இரு முறை ஏகாதசி உற்சவங்கள் நடைபெறுகின்றன. அவை சுக்கில பக்ஷ, கிருஷ்ன பக்ஷ ஏகாதசிகளாகும். ஆழ்வார் பன்னிருவரின் உற்வசங்கள் நடைபெறுகின்றன. மாத ஏகாதசி தினங்களில் ஆதி ஸ்ரீவெங்கடேச மூர்த்திக்கு உற்சவம் நடாத்தப்பெறுகின்றது.

வருடம் தோறும் தைப்பொங்கல் உற்சவம் நடாத்தப்பெறுகின்றது. பட்டிப் பொங்கல் உற்சவத்தன்று பகலில் ஸ்ரீவேணுகோபாலருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மாலையில் கோபூஜை நடாத்தியபின் இவர் வீதி வலம் வருகிறார். வருடந்தோறும் மாசித்திங்களில் வரும் திருவோண நட்சத்திரத்தில் இலட்சார்ச்சனை விழா தொடங்கப் பெற்று ரோகிணி நட்சத்திரத்தில் இவ்விழா பூர்த்தியாகின்றது. (அகண்ட ஹோம காரியத்துடன்) வருடந்தோறும் பங்குனித் அல்லது சித்திரைத் திங்களில் ஸ்ரீராமரின் ஜனன தினவிழா நிகழ்த்தப்பெறுகின்றது. இதை ஸ்ரீராமநவமிதினம் என வைணவர்கள் கொண்டாடுவர்.

பங்குனி உத்திரத்தன்று இராம பிரானுக்குப் பட்டாபிஷேக விழா நடாத்தப்படுகின்றது. சித்திரைத் திங்கள் அன்று தமிழ் வருடப் பிறப்பு உற்சவம் நடாத்தப்படுகின்றது. சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று சுதர்ஷன ஹோமவைபவம் மிக சிறப்பாக நடத்தப் பெறுகின்றது. சித்திரைத் திங்களில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜ ஆச்சாரியதுக்கு விழா எடுக்கப்படுகின்றது. ஆனித்திங்களில் வரும் ரோகினி நட்சத்திரத்தில் வருட சங்காபிஷேகமாகிய நவோத்திர சகஸ்ரசங்காபிஷேகம் மூலமூர்த்திகட்கும், பரிவார மூர்த்திகளுக்கும் நவக்கிரகபீடம், வெளி ஆஞ்சநேயருக்கும் நடாத்தப்படுகின்றன. ஆடித்திங்களில் வரும் ஆடிப்பூர நட்சத்திரத்தன்று ஸ்ரீஆண்டாள் தேவிக்குருசாந்தி வைபவம் நிகழ்த்தப்பெற்று ஸ்ரீவைகுந்தவாசரால் திருமாங்கல்ய தாரண உற்சவம் நிகழ்த்தப்பெறுகின்றது.

ஆடித்திங்களில் வரும் சுக்கிலபக்ஷ சுக்கிரவாரத் தினத்தன்று வரலக்ஷ்மி விரத உற்சவம் நிகழ்த்தப்பெற்று அடியவர்கட்கு வரலக்ஷ்மி விரத நூல் வழங்கப்படுகின்றது. ஆவணித்திங்களில் வரும் கிருஷ்ணபக்ஷ அஷ்டமித்திதியும் ரோகிணி நட்சத்திரமும் ஓர் அளவு கூடப் பெற்ற நள்ளிரவில் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு ஜனன பூஜை நிகழ்த்தப்பெற்று அடியவர்களுக்கு ஜனன காயம் வழங்கப் பெறுகின்றது. இவ்விழாவின் மறுதினம் மாலையில் உறியடி உற்சவம் நிகழ்த்தப் பெறுகின்றது. புரட்டாதித் திங்களில் வரும் சனி வாரங்களில் நவக்கிரக நாயகர்களுக்கு அடியவர்கள் கிரகதோஷ நிவர்த்தி வழிபாடு செய்கின்றனர். இத்தினங்களில் இரவு, பகல் உற்சவம் நடைபெறுகின்றன. இம்மாத்திலேயே மகோற்சவமும் நடைபெறுகின்றது. நவராத்திரி விழாக்காலத்தில் ஸ்ரீலக்ஷ்மி அம்பாள் கொலு வீற்றிருக்கின்றார். விஜயதசமித் தினத்தன்று சுவாமி சமீவிருஷ்ச பூஜையில் பங்கு பற்றி மானம்பூ உற்சவத்தில் பங்கு பெறுகின்றார்.

மகாலக்ஷ்மி தேவி மானம்பூ பூஜையில் பங்குபெறும் வழக்கம் இல்லை. மகாலக்ஷ்மி படிதாண்டாப் பத்தினி. அவர் இக்காரணத்தினால் வெளி வீதி வலம் வருவதில்லை. சுமங்கலிகள் தீப பூஜை இத்தேவஸ்தானத்தில் நவராத்திரி விழாவின் இறுதியில் வரும் பௌர்ணமியன்று கொண்டாடப்படுகின்றது. ஐப்பசித்திங்களில் தீபாவளி தினத்தன்று ஸ்ரீவேணுகோபால சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று உற்சவம் நிகழ்த்தப்படுகின்றது. கார்த்திகை திங்களில் வரும் ரோகினி நட்சத்திரத்தன்று கார்த்திகை தீப உற்சவம் நடைபெறுகின்றது. மார்கழித் திங்கள் முழுமையும் திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை பாக்கள் பாடப் பெற்று தினமும் வைகறை பூஜைகள் நிகழ்த்தப்பெறுகின்றன.

மார்கழித் திங்களில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் உற்சவம் பண்டுதொட்டு இவ்வாலயத்தில் நடைபெற்று வருகின்றது. மார்கழித் திங்களில் வரும் மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு ஜனன உற்சவம் நிகழ்த்தப் பெறுகின்றது. மார்கழித் திங்களில் வரும் சுக்கில பக்ஷ ஏகாதசித் திதியில் சுவர்க்க வாயில், துவாதசித் தின உற்சவங்கள் நிகழ்த்தப் பெறுகின்றன. இவ்வாறு வருடந்தோறும் உற்சவங்கள் நிகழ்கின்றன. ஆகையால் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற முதுமொழிக்கு இணங்க அடியவர்கள் பேரின்பப் பயனை பெறக் கடவர்.

X