யாழ் மாநகரில் வண்ணையம்பதியில் ஈழத்துத் திருப்பதியாம் ஸ்ரீமத் வேங்கடேச வரதராஜப் பெருமாளின் திவ்விய மஹோற்சவப் பெருவிழா இன்று புரட்டாதி மாதம் 7ம் நாள் (23/09/2025) கோலாகலமாக துவஜாரோகணத்துடன் ஆரம்பமாகின்றது. முதல் நாள் விழா கொடியேற்ற விழாவாகும். கொடியேற்ற விழாவன்று சுவாமி தேவிமாருடன் சூரிய விருத்தச் சேவையில் எழுந்தருளுகின்றார். வைஷ்ணவ ஐதீகப்படி சேவை என்பது திருவிழாவையும் வாகனத்தையும் குறிக்கும் சொல்லாகும். கொடியேற்றத்தன்று இரவு சுவாமி மாத்திரம் அன்ன வாகனத்தில் வெளிவீதி உலா வருவார். பிரம்ம தேவனது படைத்தற் தொழிலை ஞாபகப் படுத்தும் விதமாக அன்ன வாகனம் அமைகிறது.













